Wednesday, 28 June 2017

திருவள்ளுவர் ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா ?!


உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா?!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?


அந்த பெருமைக்குரியவர்,அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்

முழுவதும் விமர்சித்ததே இல்லை.அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் 

இருக்கும் என்று நினைத்தவர்.தன் கணவர் சாப்பிடும் போது,

ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் 

சாப்பிடுவாராம்.அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா 

இருப்பாராம்.இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் 

தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப் பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் 

குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து 

உண்ணவே அவை இரண்டும் என்றாராம்.நீ பரிமாறுகையில் சோற்று 

பருக்கை சிந்தவே இல்லை.அதனால் அதன் பயன்பாடு உனக்கு 

தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம்
கொண்டிருந்தார்.அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.வள்ளுவர் அவரை அழைக்கவே,கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்

இன்றில்லை எனும்

பெருமை படைத்து இவ்வுலகு”


என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக  பெருமைப்பட்டிருக்க  வேண்டிய அவர் மனைவியின் பிரிவைத் தாளாமல்

"அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-

இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டு எழுதினார்.

அதன் பொருள்:

அடியவனுக்கு இனியவளே!

அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்

பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!

பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்

தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.


இன்று சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா..!!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்...!

Wednesday, 21 June 2017

வடதிருமுல்லைவாயில் திருமுறை பதிகம்


இறைவர் திருப்பெயர் : நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர் : கொடியிடை நாயகி அம்மன்

திருமுறை : ஏழாம் திருமுறை 69 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல் கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். (இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்). 

போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். 

இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். (இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பாடல் கீழே தரப்பட்டுள்ளது.) இறைவன் அவன் முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். 

தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. 

தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. 

கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவார பாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

திருப்புகழ் தலம்: இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே " என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன.

சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. 


பாடல் எண் : 01
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் 
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்ற வரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 02
கூடிய இலயம் சதி பிழையாமை கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று 
தேடிய வானோர் சேர் திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, "இறைவனே நீ எங்குள்ளாய்?" என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 03
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய் தேவர் தம் அரசே 
தண் பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட 
பண்ப நின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உன் அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 04
பொன் நலம் கழனிப் புதுவிரை மருவிப் பொறி வரிவண்டு இசை பாட
அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் 
செந்நெலங் கழனி சூழ் திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பன்னலந் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்ற பொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.


பாடல் எண் : 05
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் 
தந்தமும் தரளக் குவைகளும் பவளக் கொடிகளும் சுமந்து கொண்டு உந்தி 
வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே.
பந்தனை கெடுத்து என் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 06
மற்று நான் பெற்றதார் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் 
குற்றமே செயினும் குணம் எனக் கொள்ளும் கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் அடியேன் 
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 07
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயில் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாத 
திணிபொழில் தழுவு திரு முல்லை வாயில் செல்வனே எல்லியும் பகலும் 
பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல் போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 08
நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட 
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட 
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய் போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன் போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 09
மட்டுலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே 
கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த 
சிட்டனே செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே செழுமறை பகர்ந்த 
பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும் படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 10
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் 
நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே நரை விடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
சொல்லுதற்கரிய புகழையுடையவனாகிய, `"தொண்டைமான்" என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்து கிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 11
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை
திரைதரு புனல்சூழ் திரு முல்லை வாயில் செல்வனை நாவல் ஆரூரன் 
உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் 
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.

பாடல் விளக்கம்‬:
நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல் நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.

Friday, 16 June 2017

மனிதநேய மிருகம் !


புரிகை நகரை ஆண்டுவந்த பௌரிகனுக்கு மிகவும் கெட்ட பெயர். அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்வதையே வாழ்வாகக் கொண்டிருந்தால் கெட்ட பெயர் ஏற்படத்தானே செய்யும்?




🍁 தன் சுகத்தைத் தவிர மக்களின் நலனை அவன் கருதியதே இல்லை. கடுமையான வரி விதிப்பால் அவன் நாட்டு மக்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இவன் எப்போது ஒழிவான், இந்த ஆட்சி என்று மாறும் என்றே பெருமூச்சோடு காத்திருந்தார்கள்.




🔥 சான்றோர்களின் சாபம் பௌரிகனைச் சூழ்ந்திருந்தது. அவன் யாரையும் ஒருபோதும் மதித்தவனில்லை. யார் பேச்சையும் அவன் கேட்டதும் இல்லை.




🔥 ஒருநாள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அவன் காலமானான்! காலமாகும் அந்தத் தருணத்தில், தான் காலமாவதை ஒட்டிப் பலர் முகங்களில் ஆனந்தம் தென்படுவதைப் பார்த்தான். அவன் மனம் கூசியது. அடடா, என்ன வாழ்வு வாழ்ந்தோம் என்று அந்த இறுதிக் கணத்தில் அவனிடம் ஓர் எண்ணம் எழுந்தது. ஒருவன் மரணத்தால் பலர் மகிழ்வார்களானால் அந்த வாழ்வும் ஒரு வாழ்வா என அவனிடம் தன்னிரக்கம் தோன்றியது. ‘‘இறைவா, பல பாவங்கள் செய்த என்னை நீ மீண்டும் மண்ணில் பிறக்க வைப்பாயாக!




ஆனால், என் வேண்டுகோள் ஒன்றுதான். அடுத்த பிறவியில் எனக்கு இந்தப் பிறவியின் ஞாபகம் இருக்க அருள் புரிவாய் ஐயனே! அப்படி ஞாபகமிருந்தால் நான் அடுத்த ஜன்மத்திலாவது நல்லபடி வாழ்ந்து முக்தி அடைய முயல்வேன். என் சாவை ஒட்டி எல்லோர் முகங்களிலும் தென்படும் இந்த ஆனந்தம் என்னை வாட்டி வதைக்கிறது. நான் இதுவரை செய்த எல்லாப் பாவங்களையும் பொறுத்துக் கொண்டு, சாகும் நேரத்தில் நான் கேட்கும் இந்த வேண்டுகோளை நிறைவேற்று!’’ - இப்படி வேண்டியவாறே பௌரிகன் மரணமடைந்தான். இறக்கும் தறுவாயில் நினைக்கும் இறுதி எண்ணம் ஈடேறும் என்று சொல்வ துண்டு அல்லவா? பௌரிக மன்னன் எண்ணமும் ஈடேறத் தான் செய்தது.




அது ஈடேறிய பின் நடந்த சம்பவங்கள் சுவையானவை. ஆனால், அது நாட்டில் நடந்த கதையல்ல. காட்டில் நடந்த கதை! ஓர் அடர்ந்த கானகத்தில் நரியாகப் பிறந்தான் பௌரிகன். தந்திரமாக மக்களை ஏமாற்றி, தான் மட்டும் சுகமடைந்து வாழ்ந்த பௌரிகன், நரியாக மறுபிறவி அடைந்தது நியாயம் தானே? ஆனால், என்ன ஆச்சரியம்! இந்த ஜன்மத்தில் அவன் நரியாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதனைப் போலச் செயல்பட்டது அந்த பௌரிக நரி. இந்த நரிக்குத்தான் கடவுள் கருணையால் முற்பிறவி நினைவு இருந்ததே? எனவே, அது கடந்த ஜன்ம வாழ்க்கையைப் போல அல்லாமல் இப்பிறவியில் தூய்மையாக வாழ்ந்து முக்தி அடைய முடிவு செய்தது.




அப்படியொரு சைவ நரியை அந்தக் கானகம் அதுவரை கண்டதில்லை. இந்த நரி இலை தழைகளையும் கனி வர்க்கங்களையும் மட்டுமே உண்டது. மாமிசத்தைத் தொட மறுத்தது. ஒரு முனிவரைப் போல் அது செயல்படுவதைக் கண்ட மற்ற மிருகங்கள் அதன்மேல் மரியாதை கொள்ளத் தொடங்கின. ஆனால், அதே கானகத்தில் வாழ்ந்த மற்ற நரிகளுக்கு அவமானம் தாங்கவில்லை. தங்கள் குலத்தில் பிறந்த ஒரு நரி, இப்படிக் குலாசாரம் கெட்டு வாழ்வதாவது!




சிங்கம் அடித்துத் தின்ற மாமிசத்தில் ஒரு பகுதியை அதனிடமிருந்து பிரசாதம்போல் வாங்கிச் சாப்பிட்டால் அதிலுள்ள ருசியே தனி. அந்த ருசியை அறியாமல் இப்படி இலைதழைகளைத் தின்றால் எந்தப் பிராணியாவது இந்த நரியை மதிக்குமா? ஏன் இப்படிச் சைவச் சாப்பாடு சாப்பிட்டு ஈன வாழ்வு வாழவேண்டும்? நரிகள் அனைத்தும் ஒருநாள் சைவ நரியைக் கூட்டமாகச் சென்று சந்தித்தன. ‘‘அடேய் முட்டாள்! விரதம் இருக்கிறாயா நீ? இதெல்லாம் கேடுகெட்ட மனிதர்களின் வழக்கமல்லவா? நாம் கானகவாசிகள். விருப்பம்போல் அசைவம் சாப்பிட்டு ஆனந்தமாக வாழப் பிறந்தவர்கள்.




நம் உயர்ந்த நரிக்குலத்திற்குச் சற்றும் பொருந்தாத வழக்கங்களைக் கைவிடு. மான் சாப்பிடும் புல்லை நீ சாப்பிட்டால் ஒரு மானாவது உன்னைப் பார்த்து பயப்படுமா? வா, உனக்காக ஏராளமான அசைவ உணவைச் சேமித்து வைத்திருக்கிறோம். எங்களோடு வந்து உண்டு களி,’’ என்றழைத்தன,

பௌரிக நரி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பதில் சொல்லத் தொடங்கிற்று: ‘‘அன்பான சக நரிகளே! நீங்கள் செல்லும் பாதை நரிக்கூட்டத்தினர் போகும் பொதுவான பாதை. ஆனால், எல்லா நரிகளும் இதே பாதையில் தான் போயாக வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. நான் சற்று வித்தியாசமான பாதையில் போக விரும்புகிறேன்.




மனிதர்கள் முக்தி வேண்டித் தவம் நிகழ்த்துகிறார்கள். மனிதர்களுக்குத்தான் அதற்கு உரிமை உண்டா என்ன? புத்தியுள்ள ஜீவன் எதுவானாலும் அது விரும்பினால் நல்ல வாழ்க்கை வாழலாம். நான் சைவ உணவுப் பழக்கத்திலிருந்து மாற மாட்டேன். மரணம் காத்திருக்கிறது. அதற்குள் இறைவனை நினைத்து முக்திக்கு வழிதேட வேண்டும். என்னை என் பாதையில் தொடர்ந்து செல்ல விடுங்கள்!’’ பௌரிக நரியின் பேச்சைக் கேட்டு அத்தனை நரிகளும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தன. அதன் இயல்பை மாற்ற முடியாது என்பதை உணர்ந்துகொண்டன. ‘என்ன இருந்தாலும் நீ வாழ்வது உயர்வான வாழ்வு தான்!’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றன.




இந்த சம்பவத்தை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கானகத்தை ஆண்டு கொண்டிருந்த அரசப் புலி. அது பெரும் வியப்படைந்தது. ஒரு மிருகம் இத்தனை நல்ல குணங்களோடு இருக்க முடியுமா? அப்படியானால் இதை நாம் நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். இதன் தொடர்பு பல வகையில் நமக்கு உதவும். புலி தன் மறைவிடத்தை விட்டு பௌரிக நரிமுன் வந்து நின்றது. அந்த நரியையே மரியாதையோடு பார்த்து, உண்மையான அன்பு மேலோங்கப் பேசத் தொடங்கியது: ‘‘உன் உயர்ந்த குணங்களை அறிந்து மகிழ்கிறேன். நீ என் மந்திரியாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அப்படியானால் இந்தக் கானகத்தில் என்னால் உன் அறிவுரை கேட்டு நல்லாட்சி நடத்த முடியும்!’’




நரி சிந்தித்தது. பூர்வ ஜன்மத்தில் அரசனாக இருந்து மக்களை வாட்டி வதைத்தோம். இந்த ஜன்மத்தில் மந்திரியாக இருந்து நல்ல அறிவுரை சொல்லி இந்தக் கானகத்தின் குடிவிலங்குகளிடம், நல்ல பெயர் எடுத்தால் நம் பழைய பாவம் தீருமே? புலியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த நரி ஒரு நிபந்தனை விதித்தது. ‘‘புலியாரே! ஏற்கெனவே உள்ள மந்திரிகள் என்னைப் பகைவர்களாக நினைப்பார்கள். உங்களிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் போட்டுக் கொடுப்பார்கள். கொஞ்ச நாளில் நம் இருவரிடையே மனக்கசப்பு நேரலாம். அதைத் தவிர்க்க ஒரே வழிதான் உண்டு. நீங்கள் என் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்.




மற்றவர் என்னைப் பற்றி எது சொன்னாலும் ஒருபோதும் லட்சியம் செய்யலாகாது. இப்படி நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் நான் மந்திரி ஆகச் சம்மதிக்கிறேன்!’’ புலி மகிழ்ச்சியோடு சம்மதித்தது. ஏற்கெனவே முன்ஜன்மத்தில் அரசனாக இருந்த அனுபவம் காரணமாக, அது மந்திரியாகச் சிறப்பாகப் பணிபுரிந்தது. அது மந்திரி பதவியேற்ற குறுகிய காலத்திலேயே ஊழல் பெருச்சாளிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். கானகத்து விலங்குகளுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. புதிய மந்திரியை எல்லோரும் போற்றிப் புகழத் தொடங்கினர். அரசனாக ஆட்சி செய்த புலிக்கு ஒரு வயதான தாய் உண்டு. அந்தத் தாய்ப் புலிக்கோ மகன் நல்ல மந்திரியைத் தேடிப் பிடித்திருப்பதில் மிகுந்த மன நிறைவு.




ஆனால், பழைய ஊழல் மந்திரிகளால் சும்மா இருக்க இயலுமா? அந்த விலங்குகள் புது மந்திரியின் மேல் அபவாதம் ஏற்படுத்தத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. ஒன்று கூடித் திட்டமிட்டன. ஒருநாள் அரசப் புலி சாப்பிட வைத்திருந்த மாமிசத்தை அவை ரகசியமாக எடுத்துப் புதிய மந்திரியின் குகையில் வைத்துவிட்டன. அரசப் புலி சாப்பாட்டு வேளையில், தான் சேகரித்துவைத்த மாமிசம் எங்கே எங்கே என்று தேடத் தொடங்கியது. அப்போது முன்பு மந்திரி பதவி வகித்த விலங்குகள் அதன் முன் வந்து கைகட்டி நின்று பொய்ப் பணிவோடு பேசத் தொடங்கின. ‘‘அரசே! தவறு செய்துவிட்டீர்கள். நீங்கள் புதிதாக நியமித்த நரி சரியான விலங்கல்ல. அது நூறு நரிகளின் தந்திரத்தை உள்ளடக்கியது.




போலியாக சைவ வேடம் போடுகிறது. உங்கள் சாப்பாட்டுக்காக வைத்திருந்த மாமிசத்தை அது திருடி அதன் குகையில் வைத்துக் கொண்டிருக்கிறது. அதை எங்களால் நிரூபிக்க முடியும். உத்தரவிடுங்கள். உங்களுக்கான மாமிசத்தை அதன் குகையிலிருந்து நாங்கள் கொண்டுவந்து காட்டுகிறோம்.’’

அரசப் புலி திகைப்படைந்தது. தான் ஏமாந்துவிட்டோமோ? பசியால் விளைந்த கோபமும் சேரவே அது உத்தரவிட்டது: ‘‘எங்கே என் சாப்பாட்டை அதன் குகையிலிருந்து எடுத்து வாருங்கள் பார்க்கலாம். அது உண்மையானால் அந்த விலங்கையும் விலங்கிட்டு இங்கே இழுத்து வாருங்கள்!’’

ஒரு நொடியில் புதிய மந்திரி குகையிலிருந்து புலிக்கான மாமிசம் கொணரப்பட்டது. புதிய மந்திரியான நரியும் அரசப் புலிமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.




சைவநரி சொல்லும் எதையும் கேட்க அரசப் புலி தயாராக இல்லை. அந்த நரியைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டது புலி. இந்த விவரம் கேள்விப்பட்டு ஓடோடி வந்தது அரசப் புலியின் தாய்ப்புலி. ‘‘மகனே! ஆராயாமல் தீர்ப்பு வழங்காதே. இப்போதுதான் எனக்கு வேண்டிய ஒரு விலங்கின் மூலம் பழைய மந்திரிகளின் சதித் திட்டத்தை நான் விசாரித்து அறிந்தேன். இந்த சைவ நரி மந்திரியாகப் பதவி ஏற்றதிலிருந்து நம் கானக மிருகங்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கின்றன! இதைக் கொன்று அனைத்து மிருகங்களின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடாதே. நீ தாய் சொல்லைத் தட்டாத புலி என்பது உண்மையானால் உடனே இந்த சைவ நரியை விடுதலை செய்!’’




உண்மையறிந்த அரசப் புலி பதறிப் போயிற்று. உடனடியாக சைவ நரியை விடுதலை செய்து அதனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு தழதழப்போடு வேண்டியது. ஆனால், சைவ நரி நகைத்தவாறே கம்பீரமாகப் பேசத் தொடங்கிற்று: ‘‘என்னைப் பற்றி எந்த அவதூறு கேள்விப்பட்டாலும் நீ நம்பலாகாது என்றும் என் ஆலோசனையை மட்டுமே கேட்க வேண்டும் என்றும் முன்னரே வாக்குறுதி கேட்டேன். அந்த வாக்குறுதி இப்போது மீறப்பட்டு விட்டது. இந்தத் தாய்ப்புலி மட்டும் உண்மையைக் கண்டறிந்து சொல்லவில்லை என்றால் என் நிலை என்ன ஆகியிருக்கும்?




மந்திரி பதவி ஊழல் செய்யச் சொல்லும். ஊழல் செய்யாமல் இருந்தாலோ சதித் திட்டத்தில் மாட்டிக் கொண்டு உயிரே போய்விடும். இந்த அரசியல் விளையாட்டில் நான் ஈடுபட விரும்பவில்லை. நான் கொல்லப்பட்டாலும் மகிழ்ந்திருப்பேன். ஏனெனில் எனக்கு உயிர் வாழ்வதில் ஆசை போய்விட்டது. நீ மோசமான மந்திரிகளின் துர்ப்போதனைகளில் சிக்கிக் கொள்ளாமல் கானக விலங்குகளை உன் குழந்தைகள் போல் கருதி நல்லாட்சி நடத்தி வா. என்மேல் சுமத்தப்பட்ட அபவாதத்தை நீக்கிய உன் தாய்க்கு நன்றி. நான் உன்னிடமிருந்து மட்டுமல்ல. உலகிடமிருந்தே விடைபெற விரும்புகிறேன். போதும் இந்த மந்திரி பதவியும் அரசியல் வாழ்வும். நான் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கப் போகிறேன்.’’




சொன்னபடியே அன்று தொட்டு சைவநரி உண்ணாவிரதம் மேற்கொண்டது. எத்தனையோ விலங்குகள் கெஞ்சியும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாத சைவநரி, உயிரைத் துறந்தபோது கானகமே அழுதது. அபவாதம் சுமத்திய பழைய மந்திரிகளான விலங்குகள் கூட, ஒரு தூய்மையான விலங்கின் மரணத்திற்குத் தாங்கள் காரணமாகிவிட்டது குறித்துக் கண்ணீர் விட்டன. விம்மி விம்மி அழுதது அரசப் புலி. சைவநரியின் மனத்தில் இறக்கும் தறுவாயில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. அது முன் பிறவியில் பௌரிக மன்னனாக இருந்தபோது அதன் இறப்பு குறித்து எல்லோரும் ஆனந்தமடைந்தார்களே?




இப்போது சைவநரியாகப் பிறந்துள்ள இப்பிறவியில் அது இறப்பதைக் குறித்து எல்லோரும் வருந்தி அழுகிறார்களே? இறைவா, இந்த மனநிறைவு போதும் எனக்கு என்று எண்ணியவாறே சைவ நரி நிரந்தரமாய்க் கண்ணை மூடியது. (மகாபாரதத்தில், அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது, பீஷ்மர், தர்ம புத்திரருக்கு ஏராளமான உபதேசங்களைச் செய்தார். அரசியல் வாழ்வு எவ்வளவு சிக்கலானது என்பதையும் நல்ல மந்திரியை அரசன் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் இக்கதை அப்போது பீஷ்மரால் சொல்லப்பட்டது.)