Friday, 16 June 2017

மனிதநேய மிருகம் !


புரிகை நகரை ஆண்டுவந்த பௌரிகனுக்கு மிகவும் கெட்ட பெயர். அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்வதையே வாழ்வாகக் கொண்டிருந்தால் கெட்ட பெயர் ஏற்படத்தானே செய்யும்?




🍁 தன் சுகத்தைத் தவிர மக்களின் நலனை அவன் கருதியதே இல்லை. கடுமையான வரி விதிப்பால் அவன் நாட்டு மக்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இவன் எப்போது ஒழிவான், இந்த ஆட்சி என்று மாறும் என்றே பெருமூச்சோடு காத்திருந்தார்கள்.




🔥 சான்றோர்களின் சாபம் பௌரிகனைச் சூழ்ந்திருந்தது. அவன் யாரையும் ஒருபோதும் மதித்தவனில்லை. யார் பேச்சையும் அவன் கேட்டதும் இல்லை.




🔥 ஒருநாள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அவன் காலமானான்! காலமாகும் அந்தத் தருணத்தில், தான் காலமாவதை ஒட்டிப் பலர் முகங்களில் ஆனந்தம் தென்படுவதைப் பார்த்தான். அவன் மனம் கூசியது. அடடா, என்ன வாழ்வு வாழ்ந்தோம் என்று அந்த இறுதிக் கணத்தில் அவனிடம் ஓர் எண்ணம் எழுந்தது. ஒருவன் மரணத்தால் பலர் மகிழ்வார்களானால் அந்த வாழ்வும் ஒரு வாழ்வா என அவனிடம் தன்னிரக்கம் தோன்றியது. ‘‘இறைவா, பல பாவங்கள் செய்த என்னை நீ மீண்டும் மண்ணில் பிறக்க வைப்பாயாக!




ஆனால், என் வேண்டுகோள் ஒன்றுதான். அடுத்த பிறவியில் எனக்கு இந்தப் பிறவியின் ஞாபகம் இருக்க அருள் புரிவாய் ஐயனே! அப்படி ஞாபகமிருந்தால் நான் அடுத்த ஜன்மத்திலாவது நல்லபடி வாழ்ந்து முக்தி அடைய முயல்வேன். என் சாவை ஒட்டி எல்லோர் முகங்களிலும் தென்படும் இந்த ஆனந்தம் என்னை வாட்டி வதைக்கிறது. நான் இதுவரை செய்த எல்லாப் பாவங்களையும் பொறுத்துக் கொண்டு, சாகும் நேரத்தில் நான் கேட்கும் இந்த வேண்டுகோளை நிறைவேற்று!’’ - இப்படி வேண்டியவாறே பௌரிகன் மரணமடைந்தான். இறக்கும் தறுவாயில் நினைக்கும் இறுதி எண்ணம் ஈடேறும் என்று சொல்வ துண்டு அல்லவா? பௌரிக மன்னன் எண்ணமும் ஈடேறத் தான் செய்தது.




அது ஈடேறிய பின் நடந்த சம்பவங்கள் சுவையானவை. ஆனால், அது நாட்டில் நடந்த கதையல்ல. காட்டில் நடந்த கதை! ஓர் அடர்ந்த கானகத்தில் நரியாகப் பிறந்தான் பௌரிகன். தந்திரமாக மக்களை ஏமாற்றி, தான் மட்டும் சுகமடைந்து வாழ்ந்த பௌரிகன், நரியாக மறுபிறவி அடைந்தது நியாயம் தானே? ஆனால், என்ன ஆச்சரியம்! இந்த ஜன்மத்தில் அவன் நரியாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதனைப் போலச் செயல்பட்டது அந்த பௌரிக நரி. இந்த நரிக்குத்தான் கடவுள் கருணையால் முற்பிறவி நினைவு இருந்ததே? எனவே, அது கடந்த ஜன்ம வாழ்க்கையைப் போல அல்லாமல் இப்பிறவியில் தூய்மையாக வாழ்ந்து முக்தி அடைய முடிவு செய்தது.




அப்படியொரு சைவ நரியை அந்தக் கானகம் அதுவரை கண்டதில்லை. இந்த நரி இலை தழைகளையும் கனி வர்க்கங்களையும் மட்டுமே உண்டது. மாமிசத்தைத் தொட மறுத்தது. ஒரு முனிவரைப் போல் அது செயல்படுவதைக் கண்ட மற்ற மிருகங்கள் அதன்மேல் மரியாதை கொள்ளத் தொடங்கின. ஆனால், அதே கானகத்தில் வாழ்ந்த மற்ற நரிகளுக்கு அவமானம் தாங்கவில்லை. தங்கள் குலத்தில் பிறந்த ஒரு நரி, இப்படிக் குலாசாரம் கெட்டு வாழ்வதாவது!




சிங்கம் அடித்துத் தின்ற மாமிசத்தில் ஒரு பகுதியை அதனிடமிருந்து பிரசாதம்போல் வாங்கிச் சாப்பிட்டால் அதிலுள்ள ருசியே தனி. அந்த ருசியை அறியாமல் இப்படி இலைதழைகளைத் தின்றால் எந்தப் பிராணியாவது இந்த நரியை மதிக்குமா? ஏன் இப்படிச் சைவச் சாப்பாடு சாப்பிட்டு ஈன வாழ்வு வாழவேண்டும்? நரிகள் அனைத்தும் ஒருநாள் சைவ நரியைக் கூட்டமாகச் சென்று சந்தித்தன. ‘‘அடேய் முட்டாள்! விரதம் இருக்கிறாயா நீ? இதெல்லாம் கேடுகெட்ட மனிதர்களின் வழக்கமல்லவா? நாம் கானகவாசிகள். விருப்பம்போல் அசைவம் சாப்பிட்டு ஆனந்தமாக வாழப் பிறந்தவர்கள்.




நம் உயர்ந்த நரிக்குலத்திற்குச் சற்றும் பொருந்தாத வழக்கங்களைக் கைவிடு. மான் சாப்பிடும் புல்லை நீ சாப்பிட்டால் ஒரு மானாவது உன்னைப் பார்த்து பயப்படுமா? வா, உனக்காக ஏராளமான அசைவ உணவைச் சேமித்து வைத்திருக்கிறோம். எங்களோடு வந்து உண்டு களி,’’ என்றழைத்தன,

பௌரிக நரி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பதில் சொல்லத் தொடங்கிற்று: ‘‘அன்பான சக நரிகளே! நீங்கள் செல்லும் பாதை நரிக்கூட்டத்தினர் போகும் பொதுவான பாதை. ஆனால், எல்லா நரிகளும் இதே பாதையில் தான் போயாக வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. நான் சற்று வித்தியாசமான பாதையில் போக விரும்புகிறேன்.




மனிதர்கள் முக்தி வேண்டித் தவம் நிகழ்த்துகிறார்கள். மனிதர்களுக்குத்தான் அதற்கு உரிமை உண்டா என்ன? புத்தியுள்ள ஜீவன் எதுவானாலும் அது விரும்பினால் நல்ல வாழ்க்கை வாழலாம். நான் சைவ உணவுப் பழக்கத்திலிருந்து மாற மாட்டேன். மரணம் காத்திருக்கிறது. அதற்குள் இறைவனை நினைத்து முக்திக்கு வழிதேட வேண்டும். என்னை என் பாதையில் தொடர்ந்து செல்ல விடுங்கள்!’’ பௌரிக நரியின் பேச்சைக் கேட்டு அத்தனை நரிகளும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தன. அதன் இயல்பை மாற்ற முடியாது என்பதை உணர்ந்துகொண்டன. ‘என்ன இருந்தாலும் நீ வாழ்வது உயர்வான வாழ்வு தான்!’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றன.




இந்த சம்பவத்தை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கானகத்தை ஆண்டு கொண்டிருந்த அரசப் புலி. அது பெரும் வியப்படைந்தது. ஒரு மிருகம் இத்தனை நல்ல குணங்களோடு இருக்க முடியுமா? அப்படியானால் இதை நாம் நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். இதன் தொடர்பு பல வகையில் நமக்கு உதவும். புலி தன் மறைவிடத்தை விட்டு பௌரிக நரிமுன் வந்து நின்றது. அந்த நரியையே மரியாதையோடு பார்த்து, உண்மையான அன்பு மேலோங்கப் பேசத் தொடங்கியது: ‘‘உன் உயர்ந்த குணங்களை அறிந்து மகிழ்கிறேன். நீ என் மந்திரியாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அப்படியானால் இந்தக் கானகத்தில் என்னால் உன் அறிவுரை கேட்டு நல்லாட்சி நடத்த முடியும்!’’




நரி சிந்தித்தது. பூர்வ ஜன்மத்தில் அரசனாக இருந்து மக்களை வாட்டி வதைத்தோம். இந்த ஜன்மத்தில் மந்திரியாக இருந்து நல்ல அறிவுரை சொல்லி இந்தக் கானகத்தின் குடிவிலங்குகளிடம், நல்ல பெயர் எடுத்தால் நம் பழைய பாவம் தீருமே? புலியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த நரி ஒரு நிபந்தனை விதித்தது. ‘‘புலியாரே! ஏற்கெனவே உள்ள மந்திரிகள் என்னைப் பகைவர்களாக நினைப்பார்கள். உங்களிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் போட்டுக் கொடுப்பார்கள். கொஞ்ச நாளில் நம் இருவரிடையே மனக்கசப்பு நேரலாம். அதைத் தவிர்க்க ஒரே வழிதான் உண்டு. நீங்கள் என் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்.




மற்றவர் என்னைப் பற்றி எது சொன்னாலும் ஒருபோதும் லட்சியம் செய்யலாகாது. இப்படி நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் நான் மந்திரி ஆகச் சம்மதிக்கிறேன்!’’ புலி மகிழ்ச்சியோடு சம்மதித்தது. ஏற்கெனவே முன்ஜன்மத்தில் அரசனாக இருந்த அனுபவம் காரணமாக, அது மந்திரியாகச் சிறப்பாகப் பணிபுரிந்தது. அது மந்திரி பதவியேற்ற குறுகிய காலத்திலேயே ஊழல் பெருச்சாளிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். கானகத்து விலங்குகளுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. புதிய மந்திரியை எல்லோரும் போற்றிப் புகழத் தொடங்கினர். அரசனாக ஆட்சி செய்த புலிக்கு ஒரு வயதான தாய் உண்டு. அந்தத் தாய்ப் புலிக்கோ மகன் நல்ல மந்திரியைத் தேடிப் பிடித்திருப்பதில் மிகுந்த மன நிறைவு.




ஆனால், பழைய ஊழல் மந்திரிகளால் சும்மா இருக்க இயலுமா? அந்த விலங்குகள் புது மந்திரியின் மேல் அபவாதம் ஏற்படுத்தத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. ஒன்று கூடித் திட்டமிட்டன. ஒருநாள் அரசப் புலி சாப்பிட வைத்திருந்த மாமிசத்தை அவை ரகசியமாக எடுத்துப் புதிய மந்திரியின் குகையில் வைத்துவிட்டன. அரசப் புலி சாப்பாட்டு வேளையில், தான் சேகரித்துவைத்த மாமிசம் எங்கே எங்கே என்று தேடத் தொடங்கியது. அப்போது முன்பு மந்திரி பதவி வகித்த விலங்குகள் அதன் முன் வந்து கைகட்டி நின்று பொய்ப் பணிவோடு பேசத் தொடங்கின. ‘‘அரசே! தவறு செய்துவிட்டீர்கள். நீங்கள் புதிதாக நியமித்த நரி சரியான விலங்கல்ல. அது நூறு நரிகளின் தந்திரத்தை உள்ளடக்கியது.




போலியாக சைவ வேடம் போடுகிறது. உங்கள் சாப்பாட்டுக்காக வைத்திருந்த மாமிசத்தை அது திருடி அதன் குகையில் வைத்துக் கொண்டிருக்கிறது. அதை எங்களால் நிரூபிக்க முடியும். உத்தரவிடுங்கள். உங்களுக்கான மாமிசத்தை அதன் குகையிலிருந்து நாங்கள் கொண்டுவந்து காட்டுகிறோம்.’’

அரசப் புலி திகைப்படைந்தது. தான் ஏமாந்துவிட்டோமோ? பசியால் விளைந்த கோபமும் சேரவே அது உத்தரவிட்டது: ‘‘எங்கே என் சாப்பாட்டை அதன் குகையிலிருந்து எடுத்து வாருங்கள் பார்க்கலாம். அது உண்மையானால் அந்த விலங்கையும் விலங்கிட்டு இங்கே இழுத்து வாருங்கள்!’’

ஒரு நொடியில் புதிய மந்திரி குகையிலிருந்து புலிக்கான மாமிசம் கொணரப்பட்டது. புதிய மந்திரியான நரியும் அரசப் புலிமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.




சைவநரி சொல்லும் எதையும் கேட்க அரசப் புலி தயாராக இல்லை. அந்த நரியைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டது புலி. இந்த விவரம் கேள்விப்பட்டு ஓடோடி வந்தது அரசப் புலியின் தாய்ப்புலி. ‘‘மகனே! ஆராயாமல் தீர்ப்பு வழங்காதே. இப்போதுதான் எனக்கு வேண்டிய ஒரு விலங்கின் மூலம் பழைய மந்திரிகளின் சதித் திட்டத்தை நான் விசாரித்து அறிந்தேன். இந்த சைவ நரி மந்திரியாகப் பதவி ஏற்றதிலிருந்து நம் கானக மிருகங்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கின்றன! இதைக் கொன்று அனைத்து மிருகங்களின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடாதே. நீ தாய் சொல்லைத் தட்டாத புலி என்பது உண்மையானால் உடனே இந்த சைவ நரியை விடுதலை செய்!’’




உண்மையறிந்த அரசப் புலி பதறிப் போயிற்று. உடனடியாக சைவ நரியை விடுதலை செய்து அதனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு தழதழப்போடு வேண்டியது. ஆனால், சைவ நரி நகைத்தவாறே கம்பீரமாகப் பேசத் தொடங்கிற்று: ‘‘என்னைப் பற்றி எந்த அவதூறு கேள்விப்பட்டாலும் நீ நம்பலாகாது என்றும் என் ஆலோசனையை மட்டுமே கேட்க வேண்டும் என்றும் முன்னரே வாக்குறுதி கேட்டேன். அந்த வாக்குறுதி இப்போது மீறப்பட்டு விட்டது. இந்தத் தாய்ப்புலி மட்டும் உண்மையைக் கண்டறிந்து சொல்லவில்லை என்றால் என் நிலை என்ன ஆகியிருக்கும்?




மந்திரி பதவி ஊழல் செய்யச் சொல்லும். ஊழல் செய்யாமல் இருந்தாலோ சதித் திட்டத்தில் மாட்டிக் கொண்டு உயிரே போய்விடும். இந்த அரசியல் விளையாட்டில் நான் ஈடுபட விரும்பவில்லை. நான் கொல்லப்பட்டாலும் மகிழ்ந்திருப்பேன். ஏனெனில் எனக்கு உயிர் வாழ்வதில் ஆசை போய்விட்டது. நீ மோசமான மந்திரிகளின் துர்ப்போதனைகளில் சிக்கிக் கொள்ளாமல் கானக விலங்குகளை உன் குழந்தைகள் போல் கருதி நல்லாட்சி நடத்தி வா. என்மேல் சுமத்தப்பட்ட அபவாதத்தை நீக்கிய உன் தாய்க்கு நன்றி. நான் உன்னிடமிருந்து மட்டுமல்ல. உலகிடமிருந்தே விடைபெற விரும்புகிறேன். போதும் இந்த மந்திரி பதவியும் அரசியல் வாழ்வும். நான் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கப் போகிறேன்.’’




சொன்னபடியே அன்று தொட்டு சைவநரி உண்ணாவிரதம் மேற்கொண்டது. எத்தனையோ விலங்குகள் கெஞ்சியும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாத சைவநரி, உயிரைத் துறந்தபோது கானகமே அழுதது. அபவாதம் சுமத்திய பழைய மந்திரிகளான விலங்குகள் கூட, ஒரு தூய்மையான விலங்கின் மரணத்திற்குத் தாங்கள் காரணமாகிவிட்டது குறித்துக் கண்ணீர் விட்டன. விம்மி விம்மி அழுதது அரசப் புலி. சைவநரியின் மனத்தில் இறக்கும் தறுவாயில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. அது முன் பிறவியில் பௌரிக மன்னனாக இருந்தபோது அதன் இறப்பு குறித்து எல்லோரும் ஆனந்தமடைந்தார்களே?




இப்போது சைவநரியாகப் பிறந்துள்ள இப்பிறவியில் அது இறப்பதைக் குறித்து எல்லோரும் வருந்தி அழுகிறார்களே? இறைவா, இந்த மனநிறைவு போதும் எனக்கு என்று எண்ணியவாறே சைவ நரி நிரந்தரமாய்க் கண்ணை மூடியது. (மகாபாரதத்தில், அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது, பீஷ்மர், தர்ம புத்திரருக்கு ஏராளமான உபதேசங்களைச் செய்தார். அரசியல் வாழ்வு எவ்வளவு சிக்கலானது என்பதையும் நல்ல மந்திரியை அரசன் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் இக்கதை அப்போது பீஷ்மரால் சொல்லப்பட்டது.)

No comments:

Post a Comment